தரணி போற்றும் தஞ்சைபெரியகோவில்
கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன். ஆயிரம் வயது ஆகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சிய ளிக்கிறது அந்தக்கோவில். அதுதான் தஞ்சை பெரிய கோவில்.
இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப் படுகிறது. கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில். கி.பி.985 ல் அரியனை ஏறிய ராஜராஜன், அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய இக்கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ஆண்டில் 275 ஆம் நாளில் நிறைவு பெற்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. கல்வெட்டு அடிப்படையில் கி.பி. 1010 ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள், தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது தெரிய வருகிறது.
இக்கோவில் கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.
மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.
மண்டபங்களும், விமானமும், அர்த்த மண்டபமும், மகாமண்டபமும், பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும்.
ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
மேலேயும் கீழேயும் பத்மதளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது.
கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரை களும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன.
உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.
தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர். நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கபட்டாலும், இராஜராஜீச்சுரம் என்றும், ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில் எனவும் கல்வெட்டுக்களில் உள்ளதைக் காணலாம். கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், தட்சிண மேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப் பட்டு திகழ்ந்தது .
ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல் மாலிக்கபூரின் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை காண முடியவில்லை.ராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்கலையே பெரியகோயில் கட்ட பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தஞ்சைக்கு தெற்கு ,தென்மேற்குத் திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும்,வாய்க்கால்களாலும் சூழப்பட்டுள்ளன.எனவே அந்த திசைகளின் வழியாக மிகவும் கனமான பெரிய கற்பாறைகளை கொண்டு வருவது கடினமான காரியம் ஆகும்.
தஞ்சையை விட சற்று உயரமான தென்மேற்கு திசைப்பகுதியே போக்குவரத்துக்கு ஏற்ற நில அமைப்பு கொண்டது.மேலும் தஞ்சைக்கு மிக அருகில் கற்பாறைகள் கிடைக்கும் இடமும் இந்த பகுதி தான்.
தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் பாறைகள் எந்தவகையை சேர்ந்ததோ அதே வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்துக் குன்னாண்டார்கோயில் பகுதி ஆகும்.
கற்களே இல்லாத ஓர் இடத்திற்கு பல்லாயிரக்கணக்கான டன்கள் எடையுடைய கற்களை ,ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வந்து கட்டியுள்ளனர்.அக்காலத்தில் எந்த ஒரு தொழில் நுட்ப வசதிகளும் இல்லாதபோதும் பிரம்மாண்டமான பாறைகளை கொண்டு வந்தது மகத்தான சாதனையே.
இதே போன்று விஜயநகர பேரரசு காலத்தில் 18 ‘ நீளமும்,8 ‘ அகலமும் ,12 ‘ உயரமும் உடைய நந்தியை வைத்ததும் மிகப் பெரிய சாதனையே.
பெரியகோவிலை சுற்றியுள்ள திருமதில் ராஜராஜனின் சேனாதிபதி கிருஷ்ணன் ராமனால் கட்டப்பட்டது. கோயில்,கீழே இரண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு அதன் மீது உயரமாக அமைக்கப் பட்டது. இரு சுவர்களின் இடைவெளியில் இரண்டு அடுக்குகளில் நாம் நடந்து செல்லலாம். ஒன்றில் நாட்டிய கரணச் சிற்பங்களும் ,மற்றொன்றில் ஓவியங்களும் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்பது வரலாற்று உண்மை .
வழித்தடம் :
தஞ்சாவூருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உண்டு. சென்னையில் இருந்து ரயில் வசதியும் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி விமான நிலையம் உள்ளது.
நன்றி: நக்கீரன்
கருத்துகள்
கருத்துரையிடுக